கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான தனி அடையாள எண் வழங்கும் திட்டத்தின் கீழ், மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு ஆதார் எண் போன்று தனித்துவமான அடையாள எண்கள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் மானியங்கள், உதவித் தொகைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பி.எம்.கிசான் திட்டத்தில் கெளரவ ஊக்கத் தொகை பெற, விவசாயிகள் இந்த அடையாள எண்ணைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாள எண்களை வழங்கும் முகாம்கள் கடந்த 10.2.2025 முதல் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. வேளாண்மைத் துறை, தோட்ட கலைத் துறை, மற்றும் சகோதரத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து கிராமங்களில் முகாம்களை நடத்தி வருகிறார்கள். இதுவரை 60,000 விவசாயிகளுக்கு மேலாக இந்த சேவையின் மூலம் தனி அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவும் இலவசமாக பதிவுசெய்து, இந்த அடையாள எண்ணைப் பெறலாம்.

இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள், ஆதார் நகல், நில ஆவணங்களின் நகல்கள், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றுடன் அருகிலுள்ள பொது சேவை மையம் அல்லது கிராம முகாம்களுக்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம். இந்த பதிவு மேற்கொள்ள கடைசி நாள் 31.3.2025 ஆகும். எனவே, அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.