
மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் ஐடி நிறுவனங்களில் வேலை கொடுப்பதாக கூறி ஏமாற்றப்பட்டு, இந்தியர்கள் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வழியில் சிக்கியவர்களை சைபர் குற்றங்களில் ஈடுபட கட்டாயப்படுத்தி, அவர்கள் மறுப்பதால் மின்சாரம் பாய்ச்சியும், பணயக்கைதிகளாக அடைத்து வைத்தும் சித்ரவதை செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்த நிலையிலே, மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து, இந்த முறைகேடுகளின் பிடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மியான்மர்-தாய்லாந்து எல்லை பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டுக் கொண்டிருந்த கால் சென்டர் ஒன்றில் சைபர் குற்றங்களில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள், கடந்த வாரம் இந்தியா திரும்பக்கூடிய வகையில் மீட்கப்பட்டனர். இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மேலும் 266 இந்தியர்களை இந்திய விமானப்படை (IAF) பாதுகாப்பாக மீட்டு, இந்தியா அழைத்து வந்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரடியாக கண்காணித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் குற்ற மையங்களில் இருந்து மீட்கப்பட்ட 266 இந்தியர்களை இந்திய விமானப்படை மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டதாக தெரிவித்தார். முன்னதாக, திங்களன்று 283 இந்தியர்கள் மீட்கப்பட்டிருந்தனர், இதுவரை மொத்தம் 549 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். மேலும், இந்த மீட்பு நடவடிக்கையில் இந்திய தூதரகங்கள், மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், வேலை வாய்ப்பு பெற்றதாகக் கூறி மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் முன் முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டவிரோத நிறுவனங்கள், மோசடி செய்யும் நபர்கள் இவ்வாறு பலரை ஏமாற்றி சட்டவிரோத பணிகளுக்காக கட்டாயமாக வேலைக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். எனவே, இந்தியர்கள் வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளை தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.