அமெரிக்காவில் 15 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக ஒரு குற்றவாளிக்கு துப்பாக்கி சூடு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வந்தவர் பிரேட் சிக்மன் (67). இவர் அவரது முன்னாள் காதலியை கடந்த 2001 ஆம் ஆண்டு துப்பாக்கியை காட்டி கடத்திச் சென்றுள்ளார். மேலும் அந்தப் பெண்ணின் பெற்றோரை பேஸ்பால் மட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.

அதே வேலை கடத்தி செல்லப்பட்ட முன்னாள் காதலி சிக்மனிடமிருந்து தப்பி சென்றுள்ளார். அதன் பின் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிக்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிக்மன் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக அமெரிக்காவில் மரண தண்டனை என்பது தூக்கு, மின்சாரம் பாய்ச்சு தண்டனை, விஷவாயு செலுத்தி தண்டனை நிறைவேற்றப்படும். அதனால் மரண தண்டனை எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க குற்றவாளி சிக்மனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி அவர் துப்பாக்கி சுட்டு மரண தண்டனை நிறைவேற்றும்படி கூறியுள்ளார். இதனால் அவருக்கு துப்பாக்கியால் சுட்டு நேற்று மரண தண்டனை வழங்கப்பட்டது.