தொகுதி மறுசீரமைப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, 1951, 1961, 1971 ஆகிய ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதில் இறுதியாக 543 தொகுதிகள் நீடித்தது. அதன் பிறகு பாஜக கூட்டணியில் திமுக அங்கம் வகித்த போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தொகுதி மறுசீரமைக்கப்பட்ட 2031 ஆம் ஆண்டு பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் எனக் கூறினார்.
அதன்படி தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் பாதிப்பு வரும் என்ற கண்ணோட்டத்தை முன்வைக்கின்றோம். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய கூடாது என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. சதவிகித அடிப்படையில் பார்த்தால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைகின்றது. வடமாநிலங்களுக்கு அதிகரிக்கிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் இந்தி மொழி பேசுகிற மக்களை வைத்துக்கொண்டு பாஜக ஆட்சிக்கு வரும். இதுதான் அவர்களுடைய வியூகம். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி தொகுதியில் மறு சீரமைப்பு செய்து 10 மாநிலங்களில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். மற்ற மாநிலங்களில் 0 தொகுதிகளை வாங்கினால் கூட அவர்கள் ஆட்சி அமைக்க முடியும் என ரகுபதி தெரிவித்துள்ளார்.
