சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இந்திய அணியின் அனைத்து போட்டிகளுமே துபாயில் நடப்பது மற்ற அணிகளை விட அதிக வாய்ப்புகளையும், நன்மைகளையும் கொடுக்கிறது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர் ஹுசைன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “துபாயில் மட்டுமே இந்திய அணி விளையாடுவதால் வேறு மைதானத்திற்கு பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம் மற்ற அணி வீரர்கள் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கும், பாகிஸ்தானிலேயே மூன்று நகரங்களுக்கு இடையே பயணம் செய்ய வேண்டியது இருக்கும். ஒவ்வொரு மைதானத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப மற்ற அணிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது இருக்கும்.

ஆனால் இந்திய அணி எங்குமே பயணம் செய்ய வேண்டியது கிடையாது. அவர்களுக்கு ஒரே ஹோட்டல், ஒரே ஓய்வு அறை,  ஒரே மைதானம் என அனைத்துமே பழகி போய்விடும். துபாய்   மைதானத்தில் உள்ள பிட்சில் சுழற் பந்து வீச்சு எடுபடும் என்பதால் இந்திய அணி 5 சுழல் பந்துவீச்சாளர்களை 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்தது. அதே சமயம் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிக விக்கெட் கிடைக்கும் என்பதால் மற்ற அணிகள் ஒன்று அல்லது இரண்டு சுழற்சபந்து வீச்சாளர்களை  மட்டுமே தங்களுடைய அணியில் தேர்வு செய்துள்ளனர்.

இந்திய அணிக்கு தாங்கள் ஆடும் அனைத்து போட்டிகளும் துபாயில் தான் நடக்கப்போகிறது என்பது தெரிந்ததால் தான் ஐந்து சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்தார்கள். இந்தியாவிற்கு தங்களுடைய சூழ்நிலை முன்பு தெரிந்திருப்பதால் அதை பயன்படுத்தி உள்ளார்கள். இப்போதைக்கு அவர்கள் தங்களுடைய பணியை சிறப்பாக செய்தால் மற்றொரு சர்வதேச கோப்பையையும் வெல்வார்கள்” என்று கூறியுள்ளார்.