மதுரையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலா, ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு பல நெருக்கடிகளை அதிமுக சந்தித்தாலும் இன்னும் 100 ஆண்டு அதிமுக தொடர தொண்டர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். தன்னலம் பார்க்காமல் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டும் தான் வெற்றி பெற முடியும். இதுவே தமிழக மக்களுக்கு நாம் செய்யும் நன்மையாகும். தீய சக்தியை அகற்றுவதற்கு அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தொண்டர்கள் உணர்கின்றனர்.
அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளேன். என்னுடைய முயற்சி வெற்றி பெற்று அதிமுகவும் ஒன்றுபடும். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மகத்தான வெற்றியை நாம் பெறுவோம். எம்ஜிஆரால் உருவாக்கிய அதிமுகவை ஜெயலலிதா வளர்த்தார். அதிமுகவே என்னுடைய உயிர் மூச்சு. மீண்டும் வெற்றி பெற்று கட்சியை செருக்கோடு இருக்க செய்வதே என்னுடைய வாழ்நாள் லட்சியமாகும். எனக்கென்று யாரும் கிடையாது. தமிழக மக்களின் உரிமைக்கு என்னுடைய குரல் எப்போதும் ஒலிக்கும். உண்மை என்னைக்குமே தோற்று போகாது. நம்பிக்கையுடன் இருங்கள் வெற்றி நிச்சயம் என்று சசிகலா பேசியுள்ளார்.
