
பிரிட்டனில் உள்ள மருத்துவர்கள் பிறவிலேயே மரபணு கோளாறு காரணமாக பார்வை குறைபாடு உடைய குழந்தைகளுக்கு பார்வை அளித்து மருத்துவ உலகில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளனர். LCA என்ற AIPL1 மரபணுவில் ஏற்படும் குருட்டுத் தன்மை விழித்திரை சிதைவு நோய். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறவிலேயே பார்வையற்றவர்களாக இருப்பார்கள். இவர்களால் எதனையும் மருத்துவ உதவி இன்றி செய்ய இயலாது. இத்தகைய மரபணு நோயை மரபணு சிகிச்சை மூலம் பிரிட்டன் மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.
இந்த மருத்துவ சிகிச்சை மூலம் நான்கு குழந்தைகளுக்கு அவர்களது கண்களுக்குத் தேவையான ஆரோக்கியமான மரபணுக்களை சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் செலுத்தி வெறும் ஒரு மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இதனால் நான்கு குழந்தைகளும் உருவங்களை பார்ப்பதோடு தங்களின் பெற்றோர்களின் முகங்களையும் இனம் கண்டு கொண்டுள்ளனர். பொம்மைகள், பிற பொருட்களை காண்கின்றனர். இந்த சிகிச்சையில் ஈடுபடுத்தப்பட்ட நான்கு குழந்தைகளும் 1 முதல் 2 வயது உடையவர்களாக இருந்துள்ளனர்.
அவர்கள் அமெரிக்கா, துருக்கி மற்றும் துனிசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள். நான்கு குழந்தைகளையும் கடந்த 2020 ஆண்டு முதல் மூர்பீல்ட்ஸ் மருத்துவர்கள் கண்காணித்து வந்துள்ளனர். இந்த நிலையில் லண்டனில் உள்ள great ormond Street மருத்துவமனையில் இந்த சிகிச்சையை செய்து முடித்துள்ளனர். இதுகுறித்து மூர்பீல்ட்ஸ் கண் மருத்துவமனையின் ரெட்டினா அறுவை சிகிச்சை நிபுணர் ஜேம்ஸ் கூறியதாவது, இந்த வகையான மரபணு நோயுடைய குழந்தைகள் ஒளி மற்றும் இருளை மட்டுமே வேறுபடுத்த முடியும்.
நாளடைவில் அவர்களது பார்வை முற்றிலுமாக மங்கிவிடும். ஆனால் இந்த மருத்துவ சாதனை மூலம் பார்வையற்ற குழந்தைகளின் பார்வையை கொண்டு வருவதற்கு முன்னேற்றமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் உள்ள குழந்தைகள் மற்றவர்கள் உதவி இன்றி படிக்கவும், எழுதவும் முடியாது. ஆனால் இப்போது சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் எழுத்துக்களை படிக்கவும், எழுதவும் தொடங்கியுள்ளனர் இது மருத்துவ உலகுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என தெரிவித்துள்ளார்.