
தங்கத்தின் விலை ஆனது தற்போது கிடுகிடுவென உயர்ந்து கொண்டே இருக்கிறது. போகின்ற போக்கை பார்த்தால் ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாது போல. அந்த அளவிற்கு இருக்கிறது. தற்போது உயர்ந்து வரும் தங்கத்தின் விலை குறித்து சென்னையில் தங்கம், வைரம் விற்பனையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாந்தகுமார் குறுகையில், “சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றத்தின் காரணமாகத்தான் தங்கத்தின் விலை கூடிக்கொண்டே போகிறது. முக்கியமாக ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும், பொருளாதார நிலையற்ற தன்மையுமே தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் . குறிப்பாக அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக உலக நாடுகள் டாலரில் வர்த்தகம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்கள்.
சர்வதேச அளவில் மறைமுகமாக தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதே அமெரிக்கா தான். ஏனென்றால் வர்த்தகம் அனைத்தும் டாலரில் நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பதால் டாலரின் மதிப்பு கூடகூட தங்கத்தின் மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் சவாலாக இருக்கும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பின் வர்த்தக மதிப்பை உடைப்பதற்கு அமெரிக்கா முயன்று வருகிறது. டாலருக்கு போட்டியாக வர்த்தகம் செய்ய விரும்பும் நாடுகளின் பணத்திலேயே வர்த்தகத்தை செய்யலாம் என்று பிரிக்ஸ் கூட்டமைப்பு முயற்சி செய்வதால் டாலரின் மதிப்பு சரிகிறது என்று அமெரிக்கா நினைக்கிறது.
இருந்தாலும் உலக அளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருவதாலும், தங்கத்தின் தேவை அதிகம் இருப்பதாலும் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மார்ச் மாதம் இறுதிக்குள் தங்கத்தின் விலை கிராம் 8000 ரூபாய் என இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி இரண்டாவது வாரத்திலேயே தங்கத்தின் விலை 8000 ஐ கடந்துள்ளது. இதே வேகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றால் டிசம்பர் மாதம் இறுதிக்குள் ஒரு கிராம் தங்கத்தின் விலை பத்தாயிரம் ரூபாயாக இருக்கும். தங்கத்தின் விலை எதிர்பார்க்கப்பட்டதை விட உயர்ந்து கொண்டே செல்லும். சில நேரங்களில் தங்கத்தின் விலை உயர்வில் சிறிய சறுக்குள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. முதலீடு செய்வதில் சிறிய சறுக்கல் ஏற்படும்போது தங்கத்தின் விலை சற்று குறைய கூடும்” என்று கூறியுள்ளார்.