கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெடுமானூர் கிராமத்தில் நாகமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நர்மதா அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை கடந்த 2013-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சர்வேஷ், நபிஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். முருகன் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்தார். இதனால் நர்மதா தனது கணவரின் குடிப்பழக்கததை நிறுத்த பல ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனைத்து சென்றுள்ளார்.

கடைசியாக குலதெய்வம் கோயிலுக்கு சென்று மது பழக்கத்தில் இருந்து வெளிவர முருகனுக்கு கயிறு கட்டியதாக கூறப்படுகிறது. அதன் பிறகும் முருகன் மது குடித்ததால் மன உளைச்சலில் இருந்த நர்மதா தனது மகன்களை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அதன் பிறகு வலி தாங்க முடியாமல் என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார்.

அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நர்மதாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக நர்மதா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நர்மதா பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக நர்மதா தனது தாய் மற்றும் சகோதரரிடம் அம்மா நான் உயிர் பிழைக்க மாட்டேன். எனது இரண்டு பிள்ளைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என அழுதபடி பேசியுள்ளார். அந்த வீடியோ காண்போரை கண் கலங்க வைக்கிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.