திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டுப்பட்டியில் எலக்ட்ரீசியனான ராஜீவ்காந்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ராஜீவ் காந்தி அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சாந்திக்கு கடந்த 28-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் சாந்தியின் மாமியார் ராஜம்மாள் தனது மருமகளை ஒரு ஆட்டோவில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

இந்த நிலையில் வக்கம்பட்டி அருகே சென்ற போது சாந்திக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் ராஜம்மாள் ஆட்டோ ஓட்டுநர் செல்வத்திடம் ஆட்டோவை நிறுத்துமாறு கூறிவிட்டு தனது மருமகளுக்கு பிரசவம் பார்த்தார். அதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு சாந்தியையும், குழந்தையையும் அதே ஆட்டோவில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்m பிரசவ வலியில் துடித்த மருமகளுக்கு மாமியார் பிரசவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.