
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இதனை மறுத்து வருகிறார்கள். இருப்பினும் அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதால் எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படும் நிலையில் கூட்டணி தொடர்பாக தலைமை தான் முடிவு செய்யும் என்று பாஜக மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள். சமீபத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேசினாலே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து விடும் என்றும் இதற்காக ரெய்டு விட்டு அதிமுகவை மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை எனவும் கூறினார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினாருக்கு அதிகாரம் கிடையாது என்று கூறினார். மேலும் பாஜகவுக்கு புதிய மாநில தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில் வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு அதிகாரம் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.