
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் என்று சபதம் எடுத்துள்ளார். அதன் பிறகு சென்னையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் தன்னைத்தானே சமீபத்தில் சாட்டையால் அடித்துக் கொண்டார். இந்நிலையில் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நான் இருக்கும் வரை திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற முடியாது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக இந்த செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது, திமுக கூட்டணி வலுவாக உள்ளதால் 2026 தேர்தலிலும் கண்டிப்பாக திமுக கூட்டணி தான் வெல்லும். நான் உயிரோடு இருக்கும் வரை கண்டிப்பாக திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற விடமாட்டேன். அதற்காக திட்டமிட்டு முதல்வர் ஸ்டாலினும் வேலை செய்கிறார்.
அவர் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் சிறப்பான ஆட்சி செய்வதோடு, பெண்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் பயன் பெறுகிறார்கள். நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டுவர பாஜக முயற்சி செய்வதன் மூலம் பிரதமர் மோடியின் மனதில் அதிபராக வேண்டும் என்ற எண்ணம் இருப்பது நன்றாக தெரிகிறது. ஆனால் கண்டிப்பாக இந்தியாவில் இது சாத்தியமாகாது. நான் உயிரோடு இருக்கும் வரை அண்ணாமலையின் சவால் பலிக்காது. அவருடைய சாட்டையடி ரசிக்கும்படியாக இருந்தது. அண்ணா பல்கலைக்கழக விவாகரத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும் திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை எனவும் விஜயின் அரசியல் வருகையால் திமுகவுக்கு எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாது என்றும் கூறினார்.