தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சிறந்த பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழக மாணவி, வெளிநபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சம்பவ நாளன்று இரவு பாதிக்கப்பட்ட மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் தனது சக ஆண் நண்பருடன் பேசிவிட்டு கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் வெளிநபர் ஒருவரால் மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கில் திமுக பிரமுகர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் FIR காப்பி சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த FIR  காப்பியில் மாணவி சம்பந்தப்பட்ட முழு விவரங்களும் அடங்கியிருந்தது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது இணையதள பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக மாணவி திமுக பிரமுகரால் பாலியல் தாக்குதலுக்கு ஆளானது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

இதுகுறித்து மாணவிக்கு நீதி வழங்கப் போராடிய முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கருநாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர, சகோதரிகளை வலுக்கட்டாயமாக காவல்துறை கைது செய்துள்ளது. குற்றவாளி திமுகவை சேர்ந்தவர். இதனால் மாணவியின் முழு விவரம் அடங்கிய அறிக்கையை வெளியே கசிய விட்டுள்ளனர். இது மாதிரியான புகார் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை சட்ட நடைமுறையாகும்.

ஆனால் திமுக அரசு இவ்வாறு சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு தனிமனித உரிமை மீறலாகும். தமிழகத்தை பெண்கள் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாற்றியிருப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். திமுக பிரமுகரை காப்பாற்ற இந்த கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும் மற்றும் காவல் துறையையும் வன்மையாக கண்டிக்கிறேன் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.