தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றபிறகு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் உரிமை தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது கூட பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதோடு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக கடன் உதவி தொகைகளையும் வழங்குகிறது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை  திட்டம் குறித்து தற்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் நிலையில் தற்போது அந்த திட்டத்தை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்வதற்கு அவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும். அதன் பிறகு 4 சக்கர வாகனங்கள் இருக்கக்கூடாது அரசு துறையில் பணியாற்ற கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதோடு வேறு ஏதாவது திட்டங்களில் உதவி பெறுபவராகவும் இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு புது தகவல் வெளி வந்துள்ளது.

ஏற்கனவே விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்படும் என்று துணை முதல்வர் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த திட்டத்தில் புதிதாக திருமணமான பெண்கள் மற்றும் அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் மனைவிகள் ஆகியோர்களும் இணைந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ரேஷன் கார்டுகள் வழங்கும்  பணிகளும் நடைபெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.