
சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. இந்த மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய தேவையான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, முன்பதிவு செய்யாதவர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. இதுவரை, பக்தர்கள் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயமாக இருந்தது. ஆனால், தற்போதைய முடிவின் அடிப்படையில், முன்பதிவு இல்லாமல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இது, பக்தர்களுக்கு மேலும் சுலபமாக தரிசனம் செய்ய வழிவகுக்கும்.
இது தவிர, சபரிமலை மண்டல பூஜை நவம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி, டிசம்பர் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. மகர விளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்படும். பக்தர்களின் வசதிக்காக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பம்பா மற்றும் கோயில் பாதை பகுதிகளில் கூடுதல் ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.