
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படையின் வான்வெளி சாகசம் நடைபெற்ற நிலையில் அதிக வெயில் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். அதோடு உடல் நலக்குறைவினால் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிய நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை சரமாரியாக விமர்சித்தது. அதோடு திமுக அரசின் அலட்சியப் போக்கு தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்று ம் கடுமையான விமர்சனங்களை முன்மொழிந்தது.
இருப்பினும் அதிக வெயில் காரணமாகத்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் இந்திய விமானப்படை சொன்ன நேரத்தில் மட்டும்தான் சாகச நிகழ்ச்சி நடந்ததாகவும் வெயில் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளை அரசியல் ஆக்காதீர்கள் என்றும் திமுக அரசு கேட்டுக் கொண்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கும் நேற்று நிவாரணம் அறிவித்தார். அதன்படி விலைமதிப்பில்லா உயிர்கள் போனதற்கு அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் வேதனைகளையும் தெரிவித்தார். மேலும் 5 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.