நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அவருக்கு செரிமான கோளாறு மற்றும் லேசான நெஞ்சு வலியால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதில் அவருக்கு அடிவயிற்றில் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே அவருக்கு ஐசியூ பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவர் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என் ரவி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோரும் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ள ட்விட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பு சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அதனை போல அன்புமணி ராமதாஸும் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த் விரைவாக முழு நலமடைந்து இல்லம் திரும்ப எனது விருப்பங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனைப் போல சமூக வலைதளங்களில் சினிமா நட்சத்திரங்களும் ரசிகர்களும் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அடிவயிற்றின் அருகில் ஸ்டண்ட் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவர் பேசி வருகிறார் என்றும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.