கோவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கூட்டத்தின் போது ஸ்ரீ அன்னபூர்ணா நிர்வாகத்தின் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதன் பிறகு ஜிஎஸ்டியில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்த நிலையில் திடீரென அதற்கு அடுத்த நாளில் நிர்மலா சீதாராமன் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று தான் பேசியதற்காக கையடுத்து கும்பிட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டார்‌. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில் வீடியோ வெளியிட்டதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார். அதோடு வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகியையும் கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும் தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் குறிப்பாக காங்கிரஸ் கட்சி நிர்மலா சீதாராமன் இந்த விவகாரத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்து இன்று கோவையில் செல்வப் பெருந்தகை தலைமையில் போராட்டம் நடத்தியது. இந்நிலையில் தற்போது அன்னபூர்ணா நிர்வாகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பாஜக மாநில தலைமை மன்னிப்பு கேட்டதோடு வீடியோவை வெளியிட்டவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் தேவையற்ற அனுமானங்கள் மற்றும் அரசியல் தவறான புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. எனவே இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக் கொள்ள விரும்புகிறோம். இதனை நாங்கள் கடந்து செல்ல வேண்டும் என நினைக்கிறோம். இதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரி தொடர்பாக சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் பல கேள்விகளை எழுப்பிய நிலையில் அதற்கு அடுத்த நாள் தன் சொந்த விருப்பத்தின் பேரில் தான் அவர் சந்தித்தார். இந்த தனிப்பட்ட சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பல தவறான புரிதல்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது.