
கேரளா திரைத்துறையில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கேரள காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவரான சிமி ரோசெபல் ஜான் காங்கிரஸிலும் காஸ்டிங் கவுச் எனப்படும் படுகைக்கு அழைக்கும் கீழ்த்தரமான நடைமுறை இருந்து வருவதாக தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அவர் தனது கருத்தை கூறிய சில மணி நேரங்களிலேயே கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். எர்ணாகுளத்தில் வைத்து பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, கேரள காங்கிரஸ் பொறுத்தவரை பெண் உறுப்பினர்கள் உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்றால் கட்சிக்குள் தங்களிடம் நடக்கும் அத்துமீறல்களை பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் கேரள காங்கிரஸ் கட்சி தலைவர் விடி சதீசன் உள்பட ஆண் நிர்வாகிகளுக்கு ஏற்ற விதமாக நடந்து கொண்டால் மட்டும் தான் பெண்களுக்கு பதவி கிடைக்கிறது என கூறினார். காங்கிரஸில் இருக்கும் பெண் நிர்வாகிகளை கொச்சைப்படுத்தும் வகையில் சிமி பேசியதாகவும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் கேரளா காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டது.
அது மட்டும் இல்லாமல் காங்கிரஸில் உள்ள லட்சக்கணக்கான பெண்களின் மன அமைதியை பாதிக்கும் விதமாகவும், கண்ணியத்தை குலைக்கும் வகையிலும் சிமி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக கூறி காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் விடி சதீசன் கூறும் போது, நாங்கள் சிமியை ஆதரித்தோம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் கூட பல்வேறு பொறுப்புகளில் அவர் இருந்துள்ளார் என கூறியுள்ளார்.