
கேரளா மாநிலத்தில் உள்ள அங்கவாலி பகுதியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மலப்புரத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தனது கணவருடன் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து பெராமங்கலத்தை கடந்தது. அப்போது திடீரென நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அந்த பெண் அலறி துடித்ததால் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மருத்துவமனையில் ஸ்ட்ரக்சர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களோடு மருத்துவர்களும், செவிலியர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் பேருந்து மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்ததும் அங்கு தயாராக இருந்த மருத்துவர்களும், செவிலியர்களும் சேர்ந்து பேருந்தில் ஏறி பெண்ணை பரிசோதித்தனர். உடனே பேருந்திலேயே மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. சரியான நேரத்தில் மருத்துவர்கள் பாதுகாப்பாக குழந்தையை வெளியே எடுத்தனர். அதன் பிறகு தாயும், சேயும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். அந்த இளம்பெண் மிகவும் தைரியமாகவும், நம்பிக்கையுடனும் இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.