
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன் பின் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி குற்றாலத்தில் உள்ள பழைய அருவி மற்றும் மெயின் அருவி ஆகிய இரு அருவிகளை மட்டும் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் ஏற்கனவே ஐந்தருவி மட்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் தற்போது மற்ற இரு அருவிகளையும் அவர்கள் வசமே ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சேர்ந்து முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.