திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தி ரெட்டிபாளையம் பகுதியில் ரவி-சுமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிவேதா (20) என்ற மகள் இருந்த நிலையில் இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் நிவேதா அதே  பகுதியைச் சேர்ந்த பிரகலாதன் என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் கணவர் வீட்டுடன் நிவேதா கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குளிப்பதற்காக நிவேதா சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் நிவேதா குளியல் அறையை விட்டு வெளியே வராததால் அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் கதவை தட்டியுள்ளனர்.

ஆனால் அவர் கதவை திறக்காததால் பிரகலாதன் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது மூச்சுப்பேச்சு இல்லாமல் நிவேதா கிடந்தார். உடனடியாக அவர்கள் நிவேதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காங்கேயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குளியல் அறையில் மின்சாரம் தாக்கியதால் இளம்பெண் உயிரிழந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..