கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி.பாளையம் கிராமத்தில் மணியரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மணியரசன் பானுப்பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மணியரசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பானுப்பிரியா வீட்டில் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பானுப்பிரியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பானுப்பிரியாவின் தந்தை பாலசுப்பிரமணியம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் மணியரசன், அவரது தாய் இந்திரா, அண்ணி சரண்யா ஆகியோர் வரதட்சனை கேட்டு எனது மகளை கொடுமைப்படுத்தியுள்ளனர். எனது மகளின் சாவில் சந்தேகம் இருக்கிறது. எனவே உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பானுப்பிரியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.