திருப்பூர் அருகே கணவனுக்கு விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் அருகே இருக்கும் தோட்டத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருக்கின்றது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்த இவருக்கு சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தேவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே சுப்பிரமணியின் தயாருக்கும் தேவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சுப்ரமணியின் தாயார் அவரின் மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதை அடுத்து தேவி தனது கணவரிடம் உங்கள் தாயார், சகோதரியிடம் கையெழுத்து வாங்கிவிட்டு இரண்டு ஏக்கர் நிலத்தை விற்று விடுங்கள். நாம் திண்டுக்கலுக்குச் சென்று வாழலாம் என தெரிவித்திருக்கின்றார். ஆனால் சுப்பிரமணி இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கின்றார். இந்த நிலையில் சென்ற பதினைந்தாம் தேதி சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் தேவி அவருக்கு ஊசி ஒன்றை செலுத்தி இருக்கின்றார்.

சிறிது நேரத்திலேயே சுப்பிரமணி மயக்கம் அடைந்ததால் அவரின் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அப்போது அவரின் ரத்தத்தில் பூச்சி மருந்து கலந்திருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை கொடுத்தனர். இதன்பின் அவருக்கு நேற்று சுயநினைவு திரும்பியது. மேலும் அவர் தனது மனைவி தனக்கு விஷ ஊசி செலுத்தியதாக உறவினர்களிடம் கூறினார்.

சுப்பிரமணிக்கு சுயநினைவு திரும்பாத வரை உடன் இருந்து கவனித்துக் கொண்ட தேவி அவர் சுய நினைவுக்கு திரும்பியதும் மருத்துவமனையில் இருந்து தப்பித்து விட்டார். அவர் வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால் சுப்பிரமணியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்குபதிவு செய்து தலைமறைவான தேவியை வலைவீச்சி போலீசார் தேடி வருகின்றார்கள்.