இந்தியா 74-வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம். 1950 ஆம் ஆண்டு முதல் நட்பு நாடுகளின் தலைவர்களை குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக இந்தியா அழைத்து வருகின்றது. குடியரசு தின அணிவகுப்பின் சிறப்பு விருந்தினரை தேர்ந்தெடுப்பதற்கு பின்னால் நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்தியாவிற்கும் சம்பந்தப்பட்ட நாட்டிற்கும் இடையிலான உறவின் தன்மை தான் முக்கியமான மையக்கரு. குடியரசு தின அணிவகுப்பிற்கு சிறப்பு விருந்தினராக அழைப்பது இந்தியாவிற்கும் அழைக்கப்பட்ட நாட்டிற்கும் இடையிலான நட்புறவின் இறுதி அடையாளமாகும். இந்தியாவில் அரசியல், வர்த்தகம், ராணுவம் மற்றும் பொருளாதார நலன்கள் ஆகியவை இந்த முடிவின் முக்கியமானவையாக இருக்கும். அதிபர், பிரதமர், மன்னர், அமைச்சர், பொதுச்செயலாளர் மற்றும் கவர்னர் ஜெனரல் என பல்வேறு தலைவர்களை இந்தியா தனது குடியரசு தின சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.

அவர்களின் முக்கிய தலைவர்களின் சிலரை இந்த தொகுப்பில் பார்க்கலாம்:

1950 ஆம் ஆண்டில் அப்போதைய இந்தோனேசிய அதிபர் சுகர்னோ முதல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 1988-ல் இலங்கையைச் சேர்ந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனன் என்பவரும்,  1994-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் டோங்_கும், 1995-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவும்,  2006 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா மன்னர் அப்துல்லாபின் அப்துல்லா சீஸும், 2007 ஆம் ஆண்டில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினும்,  2010 ஆம் ஆண்டில் தென் கொரிய ஜனாதிபதி லீ மியுங் பாக்-ம் கலந்து கொண்டார்கள்.

1956, 1968 மற்றும் 1974 ஆகிய ஆண்டுகளில் சிறப்பு விருந்தினர்களாக இரண்டு நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஒரே நேரத்தில் கலந்து கொண்டனர். 2018 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் 10 நாடுகளின் தலைவர்கள் அடங்கிய முழு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானை சேர்ந்த கவர்னர் ஜெனரல் மாலிக் குலாப் முகமது 1955-லும் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைச்சர் ராணா அப்துல் அமீர் 1965-லும் என இரு முறை சிறப்பு விருந்தினர்களாக பாகிஸ்தானை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

1952, 1953, 1966, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளிலும் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டங்களில் சில காரணங்களால் சிறப்பு விருந்தினர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது நடந்த 74-வது குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி கலந்து கொண்டுள்ளார்.