இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் (25). இவர் கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அவருடைய சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இவர் டெல்லி-டோரா டூன் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரிஷப் பண்டுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் இருக்கிறார்.

இந்நிலையில் ரிஷப பண்ட் கார் விபத்தில் சிக்கிய போது அரியானா போக்குவரத்து கழகத்தின் பானிபட் டெப்போவுக்கு உட்பட்ட பஸ் ஓட்டுநர் சுஷில் குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜீத் இருவரும் ரிஷப் பண்டை கார் விபத்தில் இருந்து காப்பாற்றி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் ரிஷப் பண்டை காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கும் விருது வழங்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவித்த நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு இருவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருதை முதல் மந்திரியிடம் இருந்து சுசிலின் மனைவி ரீத்து மற்றும் பரம் ஜீத்தின் தந்தை சுரேஷ்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.