சில நாடுகள் சீன பயணிகளை மட்டும் குறி வைத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா உச்சத்தில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகின்றது என்றும் மருத்துவமனை நிரம்பிய வண்ணம் உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன் காரணமாக சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

மேலும் சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளன. இந்த நிலையில் தங்கள் நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை தொடர்பாளர் கூறுகையில், சீன பயணிகளை மட்டும் குறி வைத்து சில நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன என்றும் இது அறிவியல் ஆதாரபூர்வமற்றது எனவும் சாடியுள்ளார். இந்த நடைமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும் எச்சரித்தார்.