
தர்மபுரி மாவட்டம் குடிமியம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அந்த பள்ளியில் நான்காம் வகுப்பு படித்த விஷால் என்ற மாணவன் கழிப்பறைக்கு சென்றார். அப்போது சுவர் இடிந்து விழுந்து விஷால் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு மனித உரிமை ஆணையம் உறுப்பினர் கண்ணதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் சுற்றுச்சுவர் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
அதை சரி செய்ய வேண்டும் என அரூர் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு கடிதம் அனுப்பினோம். அதன் பிறகும் சுற்றுச்சுவரை சரி செய்யவில்லை என கூறினார். அதனை பதிவு செய்த மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தமிழக அரசு விஷாலின் தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு பணத்தை நான்கு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். மேலும் அரசு பள்ளிகளின் சுற்றுச்சுவர் பள்ளி கட்டிடங்களின் நிலை குறித்து கண்காணித்து பராமரிக்க உரிய வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க தொடக்க கல்வி துறை இயக்குனருக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.