கிரிக்கெட் களத்தில் எப்போது என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாது என்பதற்கு உதாரணமாக, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சயீம் அயூப், 9 வயது சிறுவன் ஒருவனின் பந்துவீச்சில் கிளீன் போல்டான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம் எனப் போற்றப்படும் 23 வயதான சயீம் அயூப், அண்மையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த 9 வயது சிறுவன் வீசிய பந்தை தடுத்தாட முயன்றார். ஆனால், பந்து அவரது பேட்டில் படாமல் நேராக ஸ்டம்புகளைத் தகர்த்தது. சர்வதேச அளவில் விளையாடும் ஒரு வீரர், சிறுவனிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இருப்பினும், தனது விக்கெட்டை வீழ்த்திய அந்தச் சிறுவனை சயீம் அயூப் வெகுவாகப் பாராட்டினார். அவனுக்காக கைதட்டியதுடன், பயிற்சியின் முடிவில் பந்தில் கையெழுத்திட்டு பரிசளித்தார். அவரது இந்த விளையாட்டு உணர்வுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Getting clean bowled and still taking time to sign an autograph for the young bowler a classy gesture from Saim Ayub that reflects true sportsmanship beyond the game. 👏🏏@SaimAyub7#SaimAyub #Cricket #Sportsmanship #PakistanCricket #AlavésBarça pic.twitter.com/bxijtaQ3E4
— Dananeer Khan (@Dananeer_Khann) May 14, 2026
மறுபுறம், சயீம் அயூப்பிற்கு கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சி அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 28 பேர் கொண்ட பயிற்சி முகாமில் சயீம் அயூப்பின் பெயர் இடம்பெறவில்லை. 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 751 ரன்கள் (சராசரி 47) எடுத்திருந்த போதிலும், அவர் நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணியால் சுமார் 12.6 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்டார் சயீம். ஆனால், 13 போட்டிகளில் விளையாடி வெறும் 258 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். இந்த மோசமான ஃபார்ம் காரணமாகவே அவர் ஆஸ்திரேலிய தொடர் மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் சிறுவனிடம் விக்கெட்டை இழந்த வீடியோவும், அணியில் இருந்து நீக்கப்பட்ட செய்தியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
