சைபர் தாக்குதல்கள் என்பது இனி வெறும் தரவுகளைத் திருடுவதோடு நின்றுவிடாது, மனித உயிர்களுக்கே அச்சுறுத்தலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் கௌரவ் சுக்லா எச்சரித்துள்ளார். அதாவது டெலாய்ட் தெற்காசியாவின் சைபர் பிரிவு தலைவரான கௌரவ் சுக்லா இதுகுறித்துக் கூறுகையில், “தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் செயல்பாட்டு தொழில்நுட்பம் (OT) ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி குறைந்து வருவதால், விமானப் போக்குவரத்து, மருத்துவம், போக்குவரத்து மற்றும் பொதுப் பயன்பாட்டுத் துறைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, சைபர் அச்சுறுத்தல்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளைத் தாண்டி, நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்கத் தொடங்கியுள்ளன” என்றார். டிஜிட்டல் மாற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், தாக்குதல் நடத்துபவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு பகீர் உதாரணத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“நீங்கள் ஒரு நவீன ‘கனெக்டட் காரை’ (Connected Car) மணிக்கு 120 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் ஓட்டிச் செல்லும்போது, திடீரென காரின் ஸ்டீயரிங் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிந்தால், அப்போது உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்; உங்கள் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைப் பற்றித்தான் கவலைப்படுவீர்கள். இதுதான் தற்போதைய சைபர் அச்சுறுத்தலின் நிலை.
அதேபோல், மருத்துவக் கருவிகளில் ஊடுருவி நோயாளிகளின் தகவல்களை மாற்றினால் அது உயிரிழப்புக்கே வழிவகுக்கும் என்றும், மின் உற்பத்தி நிலையங்கள் முடக்கப்பட்டால் நாடு தழுவிய இருள் சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) உலகிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதாகப் பாராட்டிய சுக்லா, சுமார் 24 நாடுகள் இந்தியாவைப் பின்பற்றி இத்தகைய கட்டமைப்பை உருவாக்க டெலாய்ட் நிறுவனத்தின் ஆலோசனையைப் பெற்று வருவதாகத் தெரிவித்தார். இருப்பினும், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் இந்த டிஜிட்டல் கட்டமைப்பு விரிவடையும் போது, புதிய பாதுகாப்பு ஓட்டைகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விஷயம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாக்குதல் நடத்துபவர்கள் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தும்போது, தாக்குதலின் வேகமும் வீச்சும் பல மடங்கு அதிகரிக்கும். எனவே, டிஜிட்டல் விநியோகச் சங்கிலி மற்றும் AI தொடர்பான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து கண்காணித்துச் சோதிக்க வேண்டியது அவசியம்.
பாரம்பரியப் போர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நடக்கும். ஆனால், சைபர் போர் என்பது இடைவிடாது தொடரக்கூடியது. எனவே, ஒரு மொழிக்கு எப்படி அடிப்படைத் தேவையோ, அதுபோல சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அறநெறிகள்குறித்த விழிப்புணர்வை ஆரம்பப் பள்ளிக் கல்வியிலேயே ஒரு பாடமாகச் சேர்க்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
