பெங்களூரு புறநகர் பகுதியில் நிலுவையில் உள்ள கடன் சுமை காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில் தாய் மற்றும் மகள் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது பெங்களூரு புறநகர் பகுதியைச் சேர்ந்த ஆஷா (55) மற்றும் அவரது மகள் வர்ஷிதா (34) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வர்ஷிதாவின் சகோதரர் மோகன் கௌடா (32) மற்றும் வர்ஷிதாவின் 11 வயது மகன் மயங்க் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மோகன் கௌடா தனது தாய், சகோதரி மற்றும் மருமகனின் கழுத்தை அறுத்துவிட்டு, தானும் அதே முறையில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
இந்த விபரீத முடிவை எடுப்பதற்கு முன்னதாக, குடும்பத்தினர் ஒரு வீடியோவைப் பதிவு செய்துள்ளனர். அதில், “கடுமையான கடன் சுமை காரணமாகவே இந்த முடிவை எடுக்கிறோம்” எனக் குறிப்பிட்டு, அந்த வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர். வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக வீட்டிற்கு விரைந்தனர். முன் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததால், பின்வாசல் வழியாக உள்ளே சென்று பார்த்தபோது நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெங்களூரு ஊரக எஸ்பி சந்திரகாந்த் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில் பெரும் கடன் சுமையே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணம் என்று தெரிகிறது. மோகன் கௌடா ரூ. 5 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலான சீட்டுத் தொழில் நடத்தி வந்துள்ளார்.
மேலும், யுகாதி பண்டிகையின் போது இறைச்சி விற்பனை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விற்பனை தொடர்பான பருவகால சீட்டுத் திட்டங்களையும் அவர் செயல்படுத்தியுள்ளார். அதோடு, ஆடம்பர வாழ்க்கை முறையினாலும் அவருக்குக் கடன் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத சூழலில், குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாகத் தெரிகிறது” என்றார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
