ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இந்திய ராணுவத்தை குறிவைத்து கடும் விமர்சனம் செய்துள்ளார். “8 லட்சம் பேர் கொண்ட ராணுவம் இருக்கின்றபோதிலும், தங்கள் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்பது ராணுவத்தின் பொறுப்பற்ற செயலாகும்” என்று அப்ரிடி அதிர்ச்சிகரமாக தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலில் குறைந்தது 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானை தளமாக கொண்ட தீவிரவாத குழுக்கள் தொடர்புடையதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். ஒரு பேச்சு நிகழ்ச்சியில், அப்ரிடி தனது கருத்துகளை வலுப்படுத்தினார்: “8 லட்சம் ராணுவம் இருப்பதால், காஷ்மீரில் இத்தகைய தாக்குதல்கள் நடக்காமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. ஆனால், பாதுகாப்பை வழங்க முடியவில்லை என்றால் அது  போக்கற்ற செயல்பாடு என்று கடுமையாக விமர்சித்தார்.

 

காஷ்மீர் தொடர்பான விவகாரங்களில் அப்ரிடி முன்பும் இதுபோன்ற கருத்துகளை வெளியிட்டுள்ளார். கடந்த 2016 டி20 உலகக் கோப்பையின் போது, காஷ்மீரில் இருந்து பலர் தன்னை ஆதரிக்க வந்ததாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், அப்ரிடியின் உறவினர் ஷகிப், 2003ஆம் ஆண்டு BSF படையினருடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டிருந்தார். ஷகிப் ஹர்கத்-உல்-அன்சார் அமைப்பின் தளபதியாக இருந்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.