மலையாளத் திரையுலகில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் 10 வருடங்களில் நேரம், பிரேமம் மற்றும் கோல்ட் ஆகிய 3 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதில் நேரம் மற்றும் பிரேமம் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கோல்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. இவர் அடுத்ததாக நடிகர் பகத் பாசிலை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அல்போன்ஸ் புத்திரன் அடிக்கடி தன்னுடைய ரசிகர்களிடம் பேசுவார். அப்படி ரசிகர்களிடம் பேசும்போது ஒருவர் நீங்கள் எப்போது அஜித்தை வைத்து படம் எடுப்பீர்கள் என்று அல்போன்ஸ் புத்திரனிடம் கேட்க தன்னுடைய ஆதங்கத்தை அல்போன்ஸ் புத்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது, கடந்த 8 வருடங்களாக அஜித்தை சந்திக்க நான் முயற்சி செய்து வருகிறேன். ஆனால் ஒரு முறை கூட எனக்கு அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் அஜித்தின் மேலாளர் உட்பட அவருக்கு நெருக்கமானவர்களின் உதவியோடு இன்னமும் அஜித்தை சந்திக்க முயற்சி செய்து தான் வருகிறேன். எனக்கு வயதாவதற்குள் எப்படியாவது அஜித்தை சந்தித்து விட வேண்டும். பிரேமம் படம் ரிலீஸ் ஆனபோது நடிகர் அஜித் நிவின் பாலிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அவரை பாராட்டியுள்ளார். அப்படி அஜித்தின் பாராட்டை கூட நான் மற்றொருவர் மூலமாக தான் கேள்விப்பட்டேன் என்று ஆதங்கத்தோடு கூறியுள்ளார். மேலும் எனக்கு அஜித் மட்டுமின்றி கமல் மற்றும் விஜய் படங்களையும் இயக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக 100 நாட்கள் தியேட்டரில் ஓடக்கூடிய படமாக தான் அந்த படத்தை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.