உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயி மாவட்டத்தில் அபூர்வமான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. 2018ம் ஆண்டு திடீரென காணாமல் போன ஜிதேந்திர் என்ற நபர், 7 ஆண்டுகளுக்குப் பிறகு சமூக வலைதள ரீல்ஸ் வீடியோவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவரது மனைவி ஷீலூ, தனது மொபைலில் ரீல்ஸ் பார்க்கும்போது, தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் லூதியானாவில் காதலுடன்  வீடியோ எடுத்து மகிழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக கணவரும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து தங்களை ஏமாற்றியதாக குற்றம் சுமத்திய ஷீலூ, தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

ஜிதேந்திர்  திருமணமான வருடத்திற்கு அடுத்த ஆண்டே காணாமல் போனதாகவும், அவரது தந்தை ஹவில்தார், மனைவியின் பெற்றோர்மீது கொலை செய்து புதைத்துவிட்டதாக  காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிந்து, மனைவி மற்றும் அவரது குடும்பத்தை பெரும்  சிரமத்தில் ஆழ்த்தினர்.

“>

கடந்த 7 ஆண்டுகளாக தாயின் வீட்டில் குழந்தையுடன் மிகவும் வறுமையான சூழ்நிலையில் சாப்பிட்டும் சாப்பிடாமலும்  வாழ்ந்து வந்த ஷீலூ, கணவர் மீண்டும் வந்துவிடுவாரோ என்ற நம்பிக்கையுடன் பொறுமையாக காத்திருந்தார்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் மகிழ்ச்சியாக வீடியோ பதிவிட்டு இருப்பதைப் பார்த்ததும் ஷீலூ கதறியுள்ளார். “என்னை மட்டுமல்ல, என் குழந்தையையும் ஏமாற்றியுள்ளார். இது திடீர் சம்பவம் அல்ல, திட்டமிட்டு நடந்த மோசடி. இப்போது நியாயம் கிடைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக  போலீசாரும் முழுமையான விசாரணையை துவக்கியுள்ளனர்.