
ஐபிஎல் வரலாற்றில் மிக மெதுவாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை மனீஷ் பாண்டேவுடன் பகிர்ந்துள்ளார் விராட் கோலி.
2024 ஐ.பி.எல்லின் 19வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி விராட் கோலியின் சதத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. இதில் விராட் கோலி 72 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 113 ரன்களும், பாப் டு பிளெசிஸ் 33 பந்துகளில் (2 பவுண்டரி, 2சிக்ஸ்) 44 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி ஜோஸ் பட்லரின் சதம், சாம்சனின் அரைசதத்தால் 19.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆன பிறகு சஞ்சு சாம்சன் – பட்லர் ஜோடி நிலைத்து ஆடி 140+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு வித்திட்டனர். ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 100 ரன்களுடன் அவுட் ஆகாமல் போட்டியை முடித்து கொடுத்தார். சாம்சன் 42 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 69 ரன்கள் எடுத்தார்.
பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் (4 போட்டிகளில் 4 வெற்றி) முதலிடம் பிடித்துள்ளது. அதே நேரத்தில் ஆர்சிபி அணி தொடர்ந்து 3வது தோல்வியை பதிவு செய்துள்ளது. அந்த அணி மொத்தம் 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மற்றும் பதிவு செய்து புள்ளி பட்டியல் 8வது இடத்தில் உள்ளது.. ஆர்சிபியின் தொடர் தோல்விகளால் அந்த அணியின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
இந்த போட்டியில் விராட் கோலி 67 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இந்த சதத்தின் மூலம் கோலி தனது ஐபிஎல் சதங்களின் எண்ணிக்கையை 8 ஆகவும், தனது சர்வதேச டி20 வாழ்க்கையிலும் (1 சதம்) மொத்தம் 9 ஆக உயர்த்தினார். அதே நேரத்தில் விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் மெதுவான சதம் அடித்த வீரரானார். 2009 ஆம் ஆண்டு டெல்லிக்கு எதிராக 67 பந்துகளில் சதம் அடித்த மனீஷ் பாண்டேவுடன் இணைந்து மெதுவான ஐபிஎல் சதம் அடித்த சாதனையை அவர் பெற்றுள்ளார். அவர்களைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் 66 பந்துகளில் சதம் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 2011ல் கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிராக டெண்டுல்கர் 66 பந்துகளில் சதம் அடித்தார்.
ஐபிஎல்லில் மிக மெதுவாக சதம் அடித்த வீரர்கள் :
விராட் கோலி – 67
மணீஷ் பாண்டே – 67
சச்சின் டெண்டுல்கர் – 66
டேவிட் வார்னர் – 66
ஜோஸ் பட்லர் – 66
கெவின் பீட்டர்சன் – 64
கே.எல் ராகுல் – 63
விராட் கோலி – 63
விராட் கோலி – 62
அம்பதி ராயுடு – 62
கே.எல் ராகுல் – 62