
மும்பையின் கோரேகாவ் மோதிலால் நகரில் ஏற்பட்ட கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 63 வயதான ராகினி என்ற பெண், பிரதாப் என்ற டாக்சி ஓட்டுநருடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு மனைவியும், குழந்தைகளும் இருந்தபோதிலும், விவாகரத்து செய்யாமலே ராகினியுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பிரதாப் தனது மனைவியுடன் வெளியே செல்கிறேன் என்று கூறி வீட்டுச் சாவியை பக்கத்து வீட்டுக் காரரிடம் ஒப்படைத்து சென்றுள்ளார். அத்துடன் அவரது மொபைலும் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தது. இரண்டு நாட்கள் கடந்தபின், வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து வீட்டைக் திறந்து பார்த்தனர். படுக்கைக்கு கீழ் இருந்த பெட்டியை திறந்தபோது அதற்குள் ராகினியின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், ராகினியை கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக பிரதாப் தலைமறைவாக உள்ளார்.
இதற்கிடையில், ராகினியின் உறவினர்கள் தெரிவித்ததாவது, “ராகினி பெயரில் சொத்துகள் இருந்தன. அதனை அபகரிக்க இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம். சமீபத்தில் அவருடைய நகைகளும் வீடிலிருந்து காணாமல் போனதாக அவர் கூறியிருந்தார். அவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை,” என தெரிவித்தனர். தற்போது பிரதாப்பை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.