
தென் கொரியாவைச் சேர்ந்த ஹான் டே சூன் என்ற பெண், 1975 ஆம் ஆண்டு மே மாதத்தில் தனது 6 வயது மகள் கியுங்ஹாவை வீட்டருகே விளையாட விட்டுவிட்டு சந்தைக்கு சென்றிருந்தார். அவர் திரும்பி வந்தபோது, அவள் காணாமல் போயிருந்தார். அதற்குப் பிறகு கடந்த 44 ஆண்டுகளுக்கும் மேலாக, தனது மகளைக் கண்டுபிடிக்க ஹான் பல முயற்சிகளை எடுத்திருந்தும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், 2019 ஆம் ஆண்டில் ஒரு டிஎன்ஏ பரிசோதனை மூலமாக 325 கம்ரா என்ற அமைப்பின் உதவியுடன், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நர்ஸாக பணியாற்றும் லாரி பெண்டர் என்பவருடன் ஹான் டே சூனுக்கு டிஎன்ஏ இணைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, லாரி பெண்டர் தனது தாய்நாட்டுக்கு சென்றார். அங்கு இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
மகள் கியுங்ஹா கூறியதாவது, “ஒரு பெண் என்னை நேரில் வந்து ‘உன் அம்மா உன்னை வேண்டாம்’ என்று கூறி ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். பின் போலீசாரால் நான் குழந்தைகள் இல்லத்துக்கு அனுப்பப்பட்டேன். அதன்பின் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.” ஹான் டே சூன் தற்போது தென் கொரிய அரசு மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தனது மகளின் கட்டாய பிரிவையும், சட்டவிரோதமாக வெளிநாட்டில் தத்தெடுக்கப்படுவதைத் தடுக்க அரசு தலையீடு செய்யவில்லையென குற்றம் சாட்டியுள்ளார். இது தென் கொரியாவின் பல ஆண்டுகளாக நடந்துகொண்ட வெளிநாட்டு தத்தெடுப்பு முறையை எதிர்க்கும் முதல் வழக்காகும்.