
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில், 45 வயதான ஒருவர் 6 வயது சிறுமியை மூன்றாவது மனைவியாக மணந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும், உலகளாவிய அமைப்புகளிடமும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் கடந்த ஜூன் மாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
நபர், சிறுமியின் குடும்பத்துக்கு பணம் கொடுத்து திருமணத்தை முடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து புகார் எழுந்ததும், தாலிபான் அரசு அந்த நபரை சிறிது நேரம் கைது செய்து பின்னர் விடுதலை செய்தது. அவருக்கு தண்டனை வழங்காததோடு, “சிறுமிக்கு 9 வயது ஆகும் வரை உறவுநிலை வேண்டாம்” என கூறி தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நடவடிக்கை சர்வதேச அதிருப்தியை அதிகரித்துள்ளது.
தாலிபான் ஆட்சிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் குழந்தை திருமணங்கள் தொடர்பான சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டு வரை ஆண்களுக்கு 18, பெண்களுக்கு 16 வயதுக்குள் திருமணம் செல்லாது என சிவில் சட்டம் இருந்தது.
ஆனால் தற்போது, இஸ்லாமிய சட்டத்தின் பெயரில் குறைந்தபட்ச திருமண வயதைக் கூட நிர்ணயிக்காமல் விட்டுள்ளனர். யுனிசெஃப் வெளியிட்ட தரவுகளின்படி, ஆப்கானிஸ்தானில் 57% பெண்கள் 19 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள். 21% பெண்கள் 15 வயதிற்குள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இதற்கான முக்கிய காரணம் – வறுமை. போரால் தகர்ந்துள்ள ஆப்கானிய குடும்பங்கள், பெண் குழந்தைகளை பொருளாதார சுமையாக பார்க்கின்றனர். இதனால் வரதட்சணை பெறும் நோக்கத்தில் குழந்தை திருமணங்களில் ஈடுபடுகின்றனர்.
சிறுமிகளுக்கு திருமணமானால், அவர்கள் கல்வி வாய்ப்பு மட்டுமல்ல, வாழ்வாதார சுதந்திரமும் பறிக்கப்படுகிறது. மேலும், 15 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழக்கும் அபாயம் 5 மடங்கு அதிகம் என்பதும் மருத்துவ ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இத்தனை பேரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தாலிபான் அரசு இந்த திருமணத்தை தவிர்க்காததோடு, ‘தடை விதிக்காமல், ஆறு வயது சிறுமியுடன் இணைந்து வாழுவதை 9 வயதுக்குப் பின்பு தொடரலாம்’ என வழிகாட்டுதல் அளித்திருப்பது, குழந்தை உரிமைகளை முற்றிலும் மீறுவது எனக் கண்டித்து பல குழந்தை நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.