தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவிற்கு இறால் மற்றும் பலவகை கடல் உணவுகள் கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது, இந்தியா சார்ந்த இறால் மற்றும் கடல் உணவுப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்துள்ள சூழ்நிலையில், இந்த வரி கட்டண உயர்வால் தூத்துக்குடி மையமாகக் கொண்ட ஏற்றுமதி வியாபாரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இறால் உள்ளிட்ட அனைத்து கடல் உணவுகளின் ஏற்றுமதி தற்காலிகமாக முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஏற்கனவே 60-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்களில் அனுப்பப்பட்ட இறால் மற்றும் கடல் உணவுகளை அமெரிக்க வர்த்தகர்கள், “வாங்க முடியாது” என மறுத்து, அந்தக் கப்பல்களை நடுக்கடலில் திருப்பி அனுப்பிய சம்பவம், மீனவர் மற்றும் ஏற்றுமதி வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரி பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிட்டால், தமிழ்நாட்டின் கடல் உணவுத் துறையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
