ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார்.
டிரம்ப் உடனடியாக முடிவுகளை மாற்றக்கூடியவர் என்பதால், இந்திய அதிகாரிகள் இந்த வரிவிதிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் நடுவில், அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கும் செயல்முறையை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பரிச்சயம் பெற்ற 3 இந்திய அதிகாரிகள், இந்த தகவலை Reuters செய்தி நிறுவனத்துக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், அமெரிக்காவிடமிருந்து புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் ஓரிரு வாரங்களில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவரது பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்ல உள்ளதும், ரஷிய அதிபர் வ்லாதிமிர் புதின் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வரவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த முன்னேற்றங்கள், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக மற்றும் இராணுவ உறவில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில் உள்ளன.
