
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மே 22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்த நிலையில் இரவு நேரத்திலும் மழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று நாளை திருச்சி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று கனமழையின் போது இடையிடையே 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களில் மத்திய வங்காள விரிகுடா பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.