
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சிலர் மதுபானங்களை வாங்கி அதிக விலைக்கு வெளியே விற்பதாக காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசியமான புகார் ஒன்று கிடைத்தது. அந்த புகாரின் பேரில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து வாணியம்பாடி தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் தீவிரமான சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த், புதுமனை நடுப்பட்டறை பகுதியை சேர்ந்த இளந்தென்றல், கிருஷ்ணன் வட்டம் பெத்தகல்லுபள்ளியை சேர்ந்த பாபு, தெற்குப்பட்டி பகுதி அரவிந்த், மேட்டுப்பாளையம் பாரதி நகர் பகுதியில் ராஜ்குமார் ஆகியோர் மதுபானங்களை அதிக விலைக்கு விற்றதற்காக கைது செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 1000 மதுபான பாட்டில்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின் ஐந்து பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்து அம்பலூர் காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.