மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில், மொழி அடிப்படையில் ஏற்பட்ட மோதல் ஒரு டாக்சி ஓட்டுநரின் மீது வன்முறையாக மாறிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது பயணிகளிடம் மராத்தியில் சரியாக பேச முடியாததற்காக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், டிரிப்பிற்குப் 5 நிமிடங்கள் தாமதமானதையும் காரணமாகக் கொண்டு பயணிகள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினர்.

இந்த சம்பவம் முழுவதும்  வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த காணொளியில், ஓட்டுநரை பயணிகள் மிரட்டுவது மட்டுமல்லாமல், அவரை தாக்கும் காட்சிகளும் தெளிவாகக் காணப்படுகிறது. “@gharkekalesh” என்ற X கணக்கில் பதிவான இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “மராத்தியில் பேசிய போதிலும், 5 நிமிட தாமதத்திற்காக உத்தரபிரதேச டாக்சி ஓட்டுநர் தாக்கப்பட்டார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த வீடியோவை கண்ட சமூக வலைதள பயனர்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். “மொழி என்பது பிரிக்க அல்ல, இணைக்கவே” என பலரும் பதிவு செய்து வருகின்றனர். மேலும் சமீப காலமாக மும்பையில் மராட்டி மற்றும் ஹிந்தி மொழி தொடர்பான பிரச்சனைகள் குறித்த செய்திகள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.