ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசுவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.‌ அதன்படி ராஜகோபால் தோட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று 21 மாதங்கள் ஆகியும் மக்களுக்காக எந்த ஒரு நலப் பணிகளையும் செய்யவில்லை.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மொத்தமாக சீர்குலைந்து விட்டது. பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அமைச்சர் நாசர் கல்லை தூக்கி எரிகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு கையை வெட்டுவேன் என்று கூறுகிறார். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் கூட இப்படி நடந்து கொள்கிறார்கள். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டமும் அதிகரித்து விட்டது. தமிழகத்தில் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கும்போது, சாதாரண மக்களின் நிலையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேலும் 5 நாட்களில் 75 கொலைகள் நடந்துள்ளது என்று கூறினார்.