ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கில் போட்டுயிடும் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் ராஜகோபால் தோட்டம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்த போது பேசியதாவது, ஈரோடு கிழக்கில் கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக வெற்றி பெறாது என அவர் ஜோசியம் சொல்கிறார். அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தில்லு முல்லு நாடகம் நடத்துகிறார்கள். இது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த ராஜா மற்றும் கனிமொழி எம்பி ஆகிய இருவரும் ஜீ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாகத்தான் தற்போது நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். எனவே அவர்கள் ஏற்கனவே இருந்த சிறைக்கு மீண்டும் செல்வார்கள் என்று கூறியுள்ளார்.