ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கில் போட்டுயிடும் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் ராஜகோபால் தோட்டம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்த போது பேசியதாவது, திமுக அரசு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. பெண்களுக்கு மாதம்‌ ரூ. 1000 கொடுப்பதாக சொன்னார்கள். அதன்பிறகு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் தருவதாக சொன்னார்கள். எனவே வாக்கு கேட்க வரும் அமைச்சர்களிடம் 21 மாதத்திற்கு வரவேண்டிய ரூ. 23,100-ஐ கேளுங்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என்பது தான் திராவிட மாடல் என்று கூறினார்.