டெல்லியில் மதுபான கொள்கை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தில் சட்டத்திற்கு புறம்பாக பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கதுறையும் தனி வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்காக டெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து முதலமைச்சரான அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு ஆஜர் ஆகுமாறு கடந்த வருடம் நவம்பர் 2ஆம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அரவிந்த் கேஜ்ரிவால் ஆஜராகவில்லை. அதன் பிறகு மீண்டும் டிசம்பர் 21ஆம் தேதி இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை.

அடுத்ததாக மூன்றாவது முறை ஜனவரி 3ஆம் தேதி சம்மன் அனுப்பி இருந்த போதும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதற்கு குடியரசு தின விழா ஏற்பாடுகள் போன்றவற்றை காரணங்களாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் வருகின்ற 18ஆம் தேதி அரவிந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த முறையாவது விசாரணைக்கு அரவிந்த் கேஜ்ரிவால் ஆஜர் ஆவாரா அல்லது புறக்கணிப்பாரா என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.