
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தின் சிவில் லைன்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம் கங்கா விஹாரில் அதிர்ச்சி அளிக்கும் கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது 84 வயதான பிரமோத் ரஸ்தோகி எனும் வயதான பெண், தனது மகன் தயாசங்கர் ரஸ்தோகியுடன் வாழ்ந்து வந்தார். கடந்த மே 8 ஆம் தேதி, அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டில் நான்கு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த பணியாளரான சச்சின் சக்சேனா என்பவர் ஹாக்கி மட்டையால் அவரை அடித்து கொலை செய்தான்.
கொலைக்குப் பின்னர், குற்றவாளி வீட்டிலிருந்த தங்க சங்கிலி மற்றும் மோதிரங்களை கொள்ளையடித்து விட்டு தலைமறைவாகிவிட்டார். இது தொடர்பாக மகன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடத்தப்பட்டன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தடயங்களை சேகரித்தனர். இந்த கொலைக்கு பின்னணியில் கொள்ளையடிக்கும் நோக்கம் மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை, சோன்பூர் அருகே சச்சின் சக்சேனாவை மொராதாபாத் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.