கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்திற்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முக்கிய நிர்வாகிகளும் பொது மக்களை நேரில் சந்திக்காமல், அரசுப் பக்கம் எந்தவிதமான தெளிவான விளக்கத்தையும் அளிக்காமல் இருப்பது பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. விஜய் அவர்கள் ஒரு வீடியோ மூலம் தனது கருத்தை பதிவு செய்த பின்னர் அமைதிக்குள் சென்று விட்டார். ஆனால், சம்பவத்திற்கு நேரடியாகக் காரணமாக கூறப்படும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்னும் தலைமறைவாகவே உள்ளார். வழக்கில் முன்ஜாமின் கோரியும், நேரில் ஆஜராகாமல் தனது வழக்கறிஞர்களை மட்டுமே நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார். மேலும், அவரை கைது செய்ய மூன்று தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளபோதும், அவர் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது பலரிடமும் சந்தேகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் முக்கிய பேச்சாளரான சாட்டை துரைமுருகன் தனது சமூக வலைதள பக்கத்தில், “நான்கு முறை என்னை தனிப்படை அமைத்து கைது செய்தது திமுக அரசு! மீம் போட்ட தம்பி காளி உட்பட பலரை கைது செய்தது. புஸ்ஸி ஆனந்த் என்பவரை பிடிக்க ஒரு வாரம் என்பது நம்ப முடியாத செயல்!” எனக் குற்றஞ்சுமத்தியுள்ளார். மேலும், “ஜான் ஆரோக்கியசாமி தனது யுக்தியை பயன்படுத்தி புஸ்ஸியை காப்பாற்றுகிறார்” என்ற தகவலுக்கு பின்னால் உண்மை இருக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நியாயத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில், இந்தக் குற்றச்சாட்டுகள் புதிய அரசியல் வெடிகுண்டாக அமைந்துள்ளன.