தமிழகத்தில் பாஜகவும் காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள் தான் எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், அமைச்சர் பிடி ஆரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதற்கு முப்பதாயிரம் கோடி ரூபாய் ஆடியோ தான் காரணம். தவளை தன்னுடைய வாயால் கேடும் என்பது போல பிடி ஆர் கெட்டுள்ளார். நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு மிக சிறந்த நிர்வாகி. எந்தத் துறையிலும் முத்திரை பதிக்க கூடியவர்.

இன்றைய அமைச்சர்களில் யாரையும் தரகுறைவாக பேசாதவர். நிதி துறையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார். ஓபிஎஸ் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியால் முதலமைச்சராகி இருக்க முடியாது என்ற வைத்தியலிங்கம் கருத்துக்கு, எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படித்தான் கூறுவார்கள். பொறுத்திருந்து பாருங்கள் எடப்பாடி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம் என்று கூறினார்.

மேலும் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் எனவும் ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என சொல்லும் போது பல படங்கள் ஹிட் கொடுத்த விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும். அதன் பிறகு அவருடைய செயல்பாடுகள் குறித்தும் அவருடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் சொல்ல முடியும் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.